 இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. “நம்பர்1” இடத்துக்கான டெஸ்ட் தொடர் என்பதால் இந்த போட்டியை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்தனர். தமிழக வீரர் பத்ரிநாத், புதுமுக விக்கெட் கீப்பர் விர்த்திமான் சகா ஆகியோருக்கு இடம் கிடைத்தது. அவர்களுக்கு இது முதல் டெஸ்ட் போட்டி ஆகும்.
வி.வி.எஸ்.லட்சுமண் கைவிரலில் ஏற்பட்டுள்ள காயத்தில் இருந்து குணமாகவில்லை. இதனால் அவர் ஆடவில்லை. அவருக்காக அணிக்கு அழைக்கப்பட்ட ரோகித் சர்மா காலையில் பயிற்சியின் போது காயம் அடைந்தார். இதனால் விக்கெட் கீப்பர் சகாவுக்கு வாய்ப்பு கிடைத்தது.
வங்காளதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் ஆடிய ஒஜாவுக்கு பதிலாக அமித் மிஸ்ரா சேர்க்கப்பட்டார். அணியில் தமிழக வீரர்கள் இருவர் (பத்ரிநாத், முரளி) இடம் பெற்றனர்.
முன்னணி பேட்ஸ்மேன்களான டிராவிட், லட்சுமண், யுவராஜ்சிங் இல்லாமல் இந்திய அணி ஆடியது.
தென்ஆப்பிரிக்க கேப்டன் சுமித் “டாஸ்” வென்று தனது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். தொடக்க வீரர்களாக சுமித்தும், பிரின்சும் களம் இறங்கினார்கள்.
ஜாகீர்கானின் அபாரமான பந்து வீச்சால் தென் ஆப்பிரிக்கா திணறியது. 6 ரன் எடுப்பதற்குள் தொடக்க வீரர்கள் ஆட்டம் இழந்தனர். பிரின்ஸ் ரன் எதுவும் எடுக்காமலும், சுமித் 6 ரன்னிலும் ஜாகீர்கான் பந்தில் பெவிலியன் திரும்பினார்கள்.
3-வது விக்கெட்டான ஹசிம் அம்லா- காலிஸ் ஜோடி பொறுப்புடன் விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டது.
இந்த ஜோடியை பிரிக்க இந்திய பந்து வீச்சாளர்கள் திணறினர். காலிஸ் 75 பந்தில் 6 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 50 ரன்னை தொட்டார்.
மதிய உணவு இடைவேளையின் போது தென் ஆப்பிரிக்கா 2 விக்கெட் இழப்புக்கு 90 ரன் எடுத்து இருந்தது. அம்லா 24 ரன்னிலும், காலிஸ் 55 ரன்னிலும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
தொடர்ந்து ஆடிய தென்ஆப்பிரிக்கா வீரர்கள் சிறப்பாக விளையாடி ரன் சேர்த்தனர். காலிஸ் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். இது அவரது 34வது சதமாகும். மேலும் கவாஸ்கர் சாதனையை சமன் செய்தார். கவாஸ்கரும் 34 சதம் அடித்துள்ளார். மறுமுனையில் இருந்த அம்லாவும் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார்.
முதல்நாள் ஆட்டம் முடியும்வரை தென் ஆப்பிரிக்கா வீரர்களின் விக்கெட்டை இந்திய பந்து வீச்சாளர்களால் வீழ்த்த முடியவில்லை. இதனால் முதல் நாள் ஆட்ட முடிவில் தென் ஆப்பிரிக்கா 91 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 291 ரன் எடுத்துள்ளது. காலிஸ் 159 ரன்னுடனும் அம்லா 115 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். |