டுனெடின் மைதானத்தில் நடைபெற்ற வங்கதேச-நியூசீலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது ஒரு நாள் போட்டியிலும் வங்கதேசம் படுதோல்வி தழுவியது. இதனால் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை நியூஸீலாந்து 2-0 என்று கைப்பற்றியது. டாஸ் வென்று வெட்டோரி முதலில் வங்கதேச அணியை பேட் செய்ய அழைத்தார்.
தமீம், கயேஸ், அஷ்ரஃபுல், அஃப்டாப், ஷாகிப், மஹ்முதுல்லா ஆகியோர் பட்லர், டஃபி, மெக்காய் ஆகியோரிடம் ஆட்டமிழக்க வங்கதேசம் மிக மோசமான 46/6 என்ற நிலையில் இருந்தது.
ஆனால் அதன் பிறகு இளம் விக்கெட் கீப்பர் முஷ்ஃபிகுர் ரஹிமும், நயீம் இஸ்லாமும் இணைந்து 25 ஓவர்களில் 101 ரன்களைச் சேர்த்தனர்.
அப்போது நயீம் இஸ்லாம் 81 பந்துகளில் சேர்த்த 43 ரன்களுடன் ஆட்டமிழந்தார்.
முஷ்பிகுர் ரஹிம் அபாரமாக விளையாடி 8 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் சகிதம் 107 பந்துகளில் 86 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ஷகாதத் ஹுசைன் களமிறங்கி 2 பவுண்டரிகள் ஒரு சிக்சர் சகிதம் 7 பந்துகளில் 16 ரன்கள் எடுத்தார். வங்கதேசம் 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்தது.
நியூஸீலாந்து அணியில் பட்லர் 3 விக்கெட்டுகளையும், மெக்காய், டஃபே 1 விக்கெட்டையும் கைப்பற்ற வெட்டோரி 10 ஓவர்களில் 25 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார்.
இலக்கைத் துரத்த களமிறங்கிய நியூஸீலாந்து மெக்கல்லம் விக்கெட்டை மலிவாக இழந்தது. பிறகு இங்ரம் 28 ரன்களையும், கப்தில் 32 ரன்களையும் எடுத்டனர்.
ஆனால் ராஸ் டெய்லர் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார். அவர் வங்கதேசப் பந்து வீச்சை, குறிப்பாக ஷ்ஃபியுல் இஸ்லாம், ராகிபுல் ஹஸன் ஆகியோர் பந்துகளை விளாசு விளாசென்று விளாசினார்.
52 பந்துகளில் 6 பவுண்டரி, 5 சிக்சர் சகிதம் அவர் 78 ரன்களைக் குவித்தார். 27.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. |