இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.இரு அணிகளுக்கிடையேயான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. முதல் ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்பட்டது.
தொடர்ந்து இரு அணிகளும் மோதும் மூன்று போட்டிகள் கொண்ட 20 ஓவர் போட்டித் தொடர் நடந்தது. இத்தொடரின் இரண்டாவது ஆட்டம் மழையால் கைவிடப்பட்ட நிலையில், முதல் ஆட்டத்தை வென்ற தென் ஆப்பிரிக்க அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இந்நிலையில் மூன்றாவது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி நேற்று நடந்தது. போட்டி தொடங்குவதற்கு முன்னர் மழை பெய்ததால் ஆட்டம் நீண்ட நேரம் தடைபட்டது. இதனால் ஆட்டம் 11 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது.
இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணித்தலைவர் ஸ்மித் களத்தடுப்பை தெரிவு செய்தார். அதன்படி இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் கீஸ்வெட்டர் அபாரமாக ஆடி 32 பந்துகளில் 3 சிக்சர்களுடன் 50 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இறுதி கட்டத்தில் பட்லர் 10 பந்துகளை மட்டுமே சந்தித்து 3 சிக்சர்களுடன் 32 ஓட்டங்கள் விளாசினார். இதனால் இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 11 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 118 ஓட்டங்கள் குவித்தது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் ராபின் பீட்டர்சன், மோர்னே மோர்க்கெல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து 11 ஓவர்களில் 119 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணி களமிறங்கியது. அதிக இலக்கு காரணமாக ஏற்பட்ட நெருக்கடியால் அதிரடியாக ஆட முயன்ற ரிச்சர்டு லெவி, டுப்ளெஸ்சிஸ், டி வில்லியர்ஸ் ஆகியோர் ஒற்றை இலக்க ஓட்டத்துடன் வெளியேறினர். ஓரளவு சிறப்பாக ஆடிய ஆம்லாவும் 36 ஓட்டங்களில் வெளியேறினார்.
அதன் பின்னர் களமிறங்கிய வீரர்கள் அதிரடியாக ஆட முயன்றாலும் இங்கிலாந்து வீரர்களின் நேர்த்தியான பந்துவீச்சை அடித்து ஆட அவர்களால் இயலாமல் போனது.
11 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 5 விக்கெட் இழப்புக்கு 90 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. அல்பி மோர்க்கெல் 12 ஓட்டங்களுடனும், காலிஸ் 8 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர். இங்கிலாந்து தரப்பில் ஸ்வான், பிரெஸ்னன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனால் இங்கிலாந்து அணி 29 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது. |