டி20 உலகக் கிண்ண லீக் போட்டியில் இன்று நியூசிலாந்து, வங்கதேச அணிகள் மோதுகின்றன. இதில் நியூசிலாந்து சுலபமாக வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இலங்கையில், நான்காவது டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. பல்லேகலேயில் இன்று நடைபெறவுள்ள டி பிரிவு லீக் ஆட்டத்தில், ராஸ் டெய்லர் தலைமையிலான நியூசிலாந்து அணி, வங்கதேச அணியை எதிர்கொள்கிறது.
நியூசிலாந்து
நியூசிலாந்து அணியில் திறமையான துடுப்பாட்ட வீரர்கள் நிறைய உள்ளனர். இவர்களது சமீபத்திய செயல்பாடு தான் திருப்தி அளிக்கவில்லை.
மார்டின் கப்டில், பிரண்டன் மெக்கலம், வில்லியம்சன் உள்ளிட்ட முதல்வரிசை துடுப்பாட்ட வீரர்கள் ஓட்டங்கள் குவிக்கலாம். நல்ல பார்மில் உள்ள அணித்தலைவர் ராஸ் டெய்லர் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
சகலதுறை வீரர்களான ஜேம்ஸ் பிராங்க்ளின், ஜேக்கப் ஓரம் கைகொடுக்கும் பட்சத்தில் நல்ல ஸ்கோரை பெறலாம்.
நியூசிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சில் டிம் சவுத்தி சாதிக்கலாம். இவருக்கு பிரேஸ்வெல், மில்ஸ், ஓரம், பிராங்க்ளின் ஒத்துழைப்பு அளிக்கும் பட்சத்தில் எதிரணியின் ஓட்ட வேட்டையை தடுக்கலாம்.
சுழலில் அனுபவ டேனியல் வெட்டோரி இருப்பது பலம். இவருடன் இணைந்து நாதன் மெக்கலம், ஹிரா ஆகியோரும் சுழலில் அசத்தும் பட்சத்தில் விக்கெட் வேட்டை நடத்தலாம்.
வங்கதேசம்
ஜிம்பாப்வே அணிக்கெதிரான பயிற்சி போட்டியில் வெற்றி பெற்ற வங்கதேச அணி, அயர்லாந்திடம் தோல்வியடைந்தது. தமிம் இக்பால், சாகிப் அல் ஹசன், அணித்தலைவர் முஷ்பிகுர் ரஹிம், முகமது அஷ்ரபுல் ஆகியோர் துடுப்பாட்டத்தில் நம்பிக்கையளிக்கின்றனர்.
பந்துவீச்சை பொறுத்தவரை மொர்டசா, அப்துர் ரசாக் மீது எதிர்பார்ப்பு உள்ளது. இவர்களை தவிர மகமதுல்லா, ஷபியுல் இஸ்லாம், எலியாஸ் சன்னி, சித்திக் உள்ளிட்டோரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில் தொடரை வெற்றியுடன் துவக்கலாம்.
ஆசிய மண்ணில் உலகக் கிண்ண தொடர் நடப்பது, வங்கதேச அணிக்கு சாதகமான விடயம்.
துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சில் சமபலத்துடன் உள்ள இரு அணிகள் மோத இருப்பதால், இன்றைய போட்டியின் சுவாரஸ்யத்துக்கு பஞ்சமிருக்காது. |