டி20 உலகக் கிண்ணப்போட்டியின் நேற்றைய லீக் ஆட்டத்தில் வங்கதேச அணியை மெக்கல்லத்தின் அதிரடியில் நியூசிலாந்து அணி வீழ்த்தியது.இதில் 123 ஓட்டங்கள் எடுத்த பிரண்டன் மெக்கலம், டி20 அரங்கில் இரண்டு முறை சதம் அடித்த முதல் வீரரானார். முன்னதாக இவர், 2010ல் அவுஸ்திரேலியாவுக்கெதிராக கிறைஸ்ட்சர்ச்சில் நடந்த போட்டியில் ஆட்டமிழக்காமல் 116 ஓட்டங்கள் எடுத்தார்.
இது, சர்வதேச டி20 வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட 8வது சதம்.
தென் ஆப்ரிக்காவின் ரிச்சர்டு லெவி (117*, எதிர்-நியூசிலாந்து, 2012) மேற்கிந்திய தீவுகளின் கிறிஸ் கெய்ல் (117, எதிர்-தென் ஆப்ரிக்கா, 2007) இலங்கையின் டில்ஷன் (104*, எதிர்-அவுஸ்திரேலியா, 2011) இந்தியாவின் சுரேஷ் ரெய்னா (101, எதிர்-தென் ஆப்ரிக்கா, 2010) இலங்கையின் மஹேல ஜெயவர்த்தன (100, எதிர்-ஜிம்பாப்வே, 2010) ஸ்காட்லாந்தின் பெர்ரிங்டன் (100, எதிர்-வங்கதேசம், 2012)
அதிக ஓட்டங்கள்:
டி20 அரங்கில், ஒரு இன்னிங்சில் அதிக ஓட்டங்களை பதிவு செய்த வீரர்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார் மெக்கலம். இவர் 1500 ஓட்டங்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார்.
தலா 117 ஓட்டங்கள் எடுத்த ரிச்சர்டு லெவி (தென் ஆப்ரிக்கா), கிறிஸ் கெய்ல் (மேற்கிந்திய தீவுகள்) ஆகியோர் இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டனர். தவிர இது, டி20 உலகக் கிண்ணத் தொடரில் ஒரு இன்னிங்சில் பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச ஓட்டங்கள்.
அதிவேக சதம்:
இப்போட்டியில் 51 பந்தில் சதம் அடித்த மெக்கலம், டி20 அரங்கில் அதிவேக சதம் அடித்த வீரர்கள் வரிசையில் நான்காவது இடம் பிடித்தார்.
முதல் மூன்று இடங்களில் லெவி (45 பந்து),கெய்ல் (50 பந்து), மெக்கலம் (50 பந்து) ஆகியோர் உள்ளார். தவிர இது, டி20 உலகக் கிண்ண அரங்கில் பதிவு செய்யப்பட்ட இரண்டாவது அதிவேக சதம். ஏற்கனவே 2007ல் கெய்ல் 50 பந்தில் சதம் அடித்தார்.
அதிக சிக்சர்:
வங்கதேச அணிக்கெதிராக மொத்தம் 7 சிக்சர் அடித்த நியூசிலாந்தின் மெக்கலம், சர்வதேச டி20 அரங்கில் அதிக சிக்சர் விளாசிய வீரர்கள் வரிசையில் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார்.
இதுவரை 49 போட்டியில் 64 சிக்சர் அடித்துள்ளார். இவரையடுத்து அவுஸ்திரேலியாவின் வாட்சன் (50 சிக்சர்), டேவிட் வார்னர் (46), மேற்கிந்திய தீவுகளின் கெய்ல் (43), இந்தியாவின் யுவராஜ் சிங் (41) ஆகியோர் உள்ளனர்.



|