லண்டன் ஒலிம்பிக் போட்டியில் நுர் சூர்யானி என்ற 8 மாத கர்ப்பிணி பெண் ஒருவர் பங்கேற்க உள்ளார்.மலேசியாவை சேர்ந்தவர் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை நுர் சூர்யானி முகமது (வயது 29). ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் பங்கேற்கும் முதல் மலேசிய வீராங்கனை என்ற பெருமையை பெறுகிறார்.
10 மீற்றர் ஏர் ரைபிள் பிரிவில் குறி வைக்கும் நுர் சூர்யானி உலக தரவரிசையில் 47வது இடம் வகிக்கிறார். கடந்த ஜனவரி மாதம் நுர் சூர்யானி கர்ப்பமடைந்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அவரது உடல்ஆரோக்கியத்தை கவனத்தில் கொண்டு ஒலிம்பிக்குக்கு அனுப்புவதில் மலேசிய துப்பாக்கி சுடுதல் சங்கம் தயக்கம் காட்டியது. இருப்பினும் ஒலிம்பிக்கில் கலந்து கொள்வதில் நுர் சூர்யானி உறுதியாக இருந்தார்.
லண்டன் செல்ல மருத்துவர்களும் அனுமதி வழங்க, தற்போது இறுதிகட்ட தயாரிப்பில் கவனமுடன் ஈடுபட்டுள்ளார். அவரை அவரது கணவர் அருகில் இருந்து கவனித்து வருகிறார்.
ஒலிம்பிக்கில் பங்கேற்கும் அனுபவத்தை நுர் சூர்யானி கூறியதாவது, ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டிக்கு முன்பாக நான் கர்ப்பமடைந்திருப்பது தெரியவந்தது.
இதனால் எனது ஒலிம்பிக் கனவு கலைந்து விட்டதாக அதிர்ந்தேன். சரி இனி, குழந்தையை பெற்றெடுப்பதில் கவனம் செலுத்தலாம் என்ற முடிவுக்கு வந்தேன். இந்த சூழ்நிலையில் தான் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தகுதி அடிப்படையில் ஒலிம்பிக்குக்கு தெரிவு செய்யப்பட்டேன்.
அதன் பின்பு தான், கர்ப்பமாக இருந்தாலும் பரவாயில்லை எந்த வழியிலாவது ஒலிம்பிக்குக்கு செல்லும் சிந்தனை எனது மனதில் உதித்தது.
என்னை பொறுத்தவரை முடியாதது என்று எதுவும் இல்லை. இதுவும் ஒரு சவால் தான். ஒலிம்பிக்கில் பங்கேற்கும் முடிவை கைவிட்டிருந்தால், வாய்ப்புக்காக அடுத்த 4 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். யாருக்கு தெரியும் அடுத்த ஒலிம்பிக்குக்கு தகுதி பெறாமல் கூட போகலாம்.
எனது இலக்கு களத்தில் மிகச்சிறப்பாக செயல்பட வேண்டும். முடிவு எப்படி இருந்தாலும் பரவாயில்லை. தங்கப்பதக்கம் வெல்வதை குறிக்கோளாக கொண்டிருந்தால், அதனால் நெருக்கடித் தான் உருவாகும்.
துப்பாக்கியில், டிரிக்கரை இழுக்கும் போது வயிற்றில் இருக்கும் குழந்தை உதைக்குமா என்ற சுகமான சிறிய கவலையும் இருக்கிறது. எனது குழந்தை ரொம்ப அதிர்ஷ்டசாலி. இன்னும் இந்த உலகத்தை பார்க்காவிட்டாலும், அதற்குள் ஒலிம்பிக்குக்கு சென்று விட்டது எனவும் அவர் தெரிவித்தார்.



|