அமெரிக்காவில் நடைபெறும் மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் முன்னாள் நம்பர் 1 வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் அபார வெற்றி பெற்றார்.நேற்று நடைபெற்ற இரண்டாவது சுற்றில் தரவரிசையில் மூன்றாம் இடத்தில் உள்ள செக் குடியரசைச் சேர்ந்த பெட்ரா குவிட்டோவாவும், வீனஸ் வில்லியம்சும் மோதினர்.
ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிய வீனஸ் 6-4, 4-6, 6-0 என்ற செட் கணக்கில் பெட்ராவை வீழ்த்தி, 3வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
காயம் காரணமாக கடந்த சில மாதங்களாக ஓய்வில் இருந்த அவர், தற்போது உலக அளவிலான தரவரிசையில் 134 வது இடத்துக்கு பின்தங்கி உள்ளார்.
முன்னணி வீராங்கனைகளான பெலாரஸைச் சேர்ந்த விக்டோரியா அசரென்கா, ரஷ்யாவைச் சேர்ந்த மரியா கிரிலென்கோ, பிரான்ஸைச் சேர்ந்த மரியோன் பர்டோலி, செர்பிய வீராங்கனை அனா இவானோவிச், போலந்து வீராங்கனை ரட்வன்ஸ்கா ஆகியோரும் 3வது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் ஸ்பெயினைச் சேர்ந்த நட்சத்திர வீரர் ரஃபேல் நடால் 6-2, 6-0 என்ற நேர் செட்களில் கொலம்பியாவைச் சேர்ந்த சான்டியாகோ கிரால்டோவை வீழ்த்தினார்.
மேலும் ஆண்டி முர்ரே(இங்கிலாந்து), சோங்கா(பிரான்ஸ்), நிஷிகோரி(ஜப்பான்), தாமஸ் பெர்டிச்(செக்) ஆகியோரும் 3வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.
ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், செக் குடியரசைச் சேர்ந்த ஸ்டெபானக் ஜோடி 6-2, 7-6 (7-3) என்ற நேர் செட்களில் பாக்தாதிஸ், சாம் குவெரி ஜோடியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.






|