டி20 உலகக் கிண்ண லீக் போட்டியில் சமபலம் வாய்ந்த தென் ஆப்ரிக்கா, இலங்கை அணிகள் இன்று மோதுகின்றன.இலங்கையில் நான்காவது டி20 உலகக் கிண்ணத் தொடர் நடைபெற்று வருகிறது. “சி” பிரிவில் ஜிம்பாப்வே வெளியேறிய நிலையில், இலங்கை, தென் ஆப்ரிக்கா “சூப்பர்-8” சுற்றுக்கு முன்னேறி விட்டன. இன்றைய லீக் போட்டியில் இவ்விரு அணிகளும் மோதுகின்றன.
இலங்கை:
சொந்தமண் பலத்துடன் உள்ள இலங்கை அணிக்கு முதல்வரிசை துடுப்பாட்ட வீரர்கள் அனைவரும் “பார்மில்” உள்ளது கூடுதல் பலம். டில்ஷன், முனவீரா, சங்கக்காரா ஆகியோருடன் கடந்த முறை ஏமாற்றிய ஜெயவர்த்தனவும் எழுச்சி பெற்றால் நல்லது.
நீண்ட இடைவெளிக்குப் பின்பு களமிறங்கிய மாயச் சுழற்பந்து வீச்சாளர் அஜந்தா மெண்டிஸ், முதல் போட்டியில் 8 ஓட்டங்கள் மட்டும் கொடுத்து 6 விக்கெட் சாய்த்தார்.
இவரது பந்துவீச்சு தென் ஆப்ரிக்க அணிக்கு சவாலாக இருப்பது உறுதி. தவிர, வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா, குலசேகராவும் கைகொடுக்கும் பட்சத்தில் எளிய வெற்றி பெறலாம்.
தென் ஆப்ரிக்கா:
டி20 அரங்கில் முன்னணியில் உள்ள தென் ஆப்ரிக்க அணி முதல் போட்டியில் எவ்வித சிக்கலும் இன்றி வென்றது.
தொடக்க வீரர்களான ரிச்சர்டு லெவி, ஹாசிம் ஆம்லா, அணித்தலைவர் டிவிலியர்ஸ், டுமினி, டுபிளசி மற்றும் ஆன்டாங் ஆகியோர் துடுப்பாட்டத்தில் கைகொடுக்கின்றனர். தவிர, சகலதுறை வீரர் காலிஸும் அசத்தலாம்.
எந்த ஆடுகளத்திலும் விக்கெட்டுகளை சாய்க்கும் திறன் படைத்த பந்து வீச்சாளர்களை பெற்றிருப்பது தென் ஆப்ரிக்க அணியின் பலம்.
வேகத்தில் ஸ்டைன், டிசாட்சொபேயுடன், ஆல்பி மார்கல், மார்னே மார்கல் சகோதரர்கள் எதிரணியினருக்கு சிம்ம சொப்பனமாக உள்ளனர். சுழலில் ராபின் பீட்டர்சன், ஜோகன் போத்தாவும் உதவுவர் எனத் தெரிகிறது.
முதலிடம்:
இரு அணிகளுமே “சூப்பர்-8” சுற்றுக்கு முன்னேறிவிட்டன. இதனால், தோல்வியால் எவ்வித நெருக்கடியும் ஏற்படப் போவதில்லை. இருப்பினும், இன்று வெல்லும் அணி, “சி” பிரிவில் முதலிடம் பெறலாம். |