இந்தியாவின் இளம் அதிரடி வீரரான வீராட் கோஹ்லியை வீழ்த்த இலங்கை புதுத்திட்டம் தீட்டியுள்ளதாக இலங்கை அணியின் அணித்தலைவர் மஹேல ஜெயவர்த்தன கூறியுள்ளார்.இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.
முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வீராட் கோஹ்லியின் அதிரடி ஆட்டத்தால் இந்தியாவிடம் 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. கோஹ்லி சதம் கடந்து இந்தியாவின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.
கோஹ்லி, சமீபத்தில் விளையாடிய ஐந்து போட்டியில் எடுத்த நான்கு சதத்தில், மூன்று சதம் இலங்கைக்கெதிராக எடுக்கப்பட்டது. மேலும், இவரின் அதிகபட்ச ஓட்டங்களான பாகிஸ்தானுக்கெதிரான 183 ஓட்டங்களும் அடங்கும்.
இதுகுறித்து இலங்கை அணியின் அணித்தலைவர் மஹேல ஜெயவர்த்தன கூறுகையில், இந்திய அணியின் துணை அணித்தலைவரான கோஹ்லி ஆரம்ப காலங்களில் பெரிய அச்சுறுத்தலாக இருந்ததில்லை.
ஆனால், தற்போது எங்களுக்கு அச்சம் தரக்கூடிய திறமைமிக்க எதிரியாக மாறியுள்ளார். எங்களின் பந்து வீச்சு முறைகளுக்கேற்ப லாவகமாக விளையாடுகிறார்.
எனவே, நாங்கள் இன்றைய போட்டியில் கோஹ்லியை வீழ்த்த புதிய திட்டம் வைத்துள்ளோம் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி ஹம்பாந்தோட்டையில் இன்று நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. |