ஆசிய தடகள போட்டியில் பதக்கம் வென்ற வீராங்கனை செங்கல் சூளையில் தினக்கூலியாக வேலை செய்யும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.தமிழகத்தின் புதுக்கோட்டையில் உள்ள கத்தக்குறிச்சி என்ற கிராமத்தைச் சேர்ந்த தடகள வீராங்கனை சாந்தி. இவர் கடந்த 2006ம் ஆண்டு நடந்த தோகா ஆசிய தடகள போட்டியில் பங்கேற்று வெள்ளிப்பதக்கம் வென்றார்.
பதக்கம் வென்ற சில மாதங்களில் அவருக்கு நடத்தப்பட்ட பாலின சோதனையில் அவரது உடம்பில் ஆண்களுக்குரிய குரோமோசோம்கள் அதிகளவில் இருப்பதால் அவர் பெண் அல்ல என்று அவரின் பதக்கம் பறிக்கப்பட்டது.
இதனால் மனமுடைந்த அவர் தற்கொலைக்கு முயன்றார். அதன்பின்னர் அவரை காப்பாற்றிய அவரது தந்தை சவுந்தரராஜன் ஒரு விளையாட்டு பயிற்சிமையத்தில் அவரை சேர்த்துவிட்டார். அதன் பின்னர் அந்த வேலையும் சரியாக இல்லாததால் 2010ம் ஆண்டிலிருந்து வேலையில்லாமல் இருந்தார்.
தற்போது மூன்று மாதங்களாக செங்கல் சூளையில் தினக்கூலியாக ரூ. 200 சம்பளத்திற்கு வேலை செய்து வருகிறார். இவரது பெற்றோர்களும் செங்கல் சூளையில் தினக்கூலிகளாகவே உள்ளனர்.
இவரைப் போலவே கடந்த 2009ம் ஆண்டில் நடைபெற்ற பெர்லின் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்ற தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்த கேஸ்டர் சிமென்யா என்ற பெண்ணுக்கும் ஆண் குரோமோசோம்கள் அதிகளவு இருப்பதாக புகார் எழுந்ததைத் தொடரந்து அவருக்கும் தடை விதிக்கப்பட்டது.
ஆனால், இந்த பெண்ணுக்கு அவளது நாடு ஆதரவாக செயல்பட்டு போராடியதால் அந்தப்பெண் மீதிருந்த தடையை சர்வதேச விளையாட்டு ஆணையம் நீக்கியது. தற்போது அந்தப்பெண் லண்டன் ஒலிம்பிக்சில் அந்த நாட்டுக்கொடியை ஏந்திச் செல்லவுள்ளார்.
துரதிர்ஷ்டவசமாக சாந்திக்கு இந்தியா எந்த ஆதரவும் தராததால் தற்போது இந்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்திலும் பல முறை விண்ணப்பித்தும் அவருக்கு எந்த உதவியும் கிடைக்காமல் கஷ்டப்பட்டு வருகிறார்.
மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் தடகள போட்டியில் சாதிக்க முடியும் என்கின்றார். ஆனால் தற்போது அவர் வேண்டுவது ஒரு வேலை மட்டுமே.


|