லண்டன் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற இங்கிலாந்து வீரர் ஆன்டி முர்ரே, சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார்.அமெரிக்காவின் நியூயார்க் நகரில், யு.எஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் (ஓகஸ்ட் 27ம் திகதி - செப்டெம்பர் 9ம் திகதி) தொடர் நடைபெற உள்ளது. இதற்கான ஒத்திகை போட்டியாக சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் நடைபெற்று வருகிறது.
இதன் ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்றில், உலகத் தரவரிசையில் 4வது இடத்தில் உள்ள இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே, பிரான்சின் ஜெரிமி சார்டியை சந்தித்தார். இதில் முர்ரே 4-6, 4-6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.
“நடப்பு சாம்பியன்” அந்தஸ்துடன் களமிறங்கிய முர்ரே, சமீபத்தில் நடந்து முடிந்த லண்டன் ஒலிம்பிக்கில் தங்கம் வென்று சாதித்தார்.
மற்றொரு மூன்றாவது சுற்றுப் போட்டியில் உலகின் “நம்பர் 1” வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், அவுஸ்திரேலியாவின் பெர்னார்டு டோமிக்கை சந்தித்தார். இதில் பெடரர் 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.
மற்ற போட்டிகளில் நோவக் ஜோகோவிச் (செர்பியா), மரின் சிலிக் (குரோஷியா), மார்டி பிஷ் (அமெரிக்கா), ஸ்டானிஸ்லாஸ் வாவ்ரின்கா (சுவிட்சர்லாந்து), ஜுயன் மார்டின் டெல்போட்ரோ (அர்ஜென்டினா), மிலோஸ் ராவோனிச் (கனடா) ஆகியோர் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றனர்.
மகளிர் ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்றில் செக்குடியரசின் பெட்ரா கிவிட்டோவா 3-6, 6-2, 7,5 என்ற செட் கணக்கில் ஜேர்மனியின் மோனா பார்த்தெலை போராடி வீழ்த்தினார்.
மற்ற போட்டிகளில் செரினா, வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா), சமந்தா ஸ்டோசுர் (அவுஸ்திரேலியா) உட்பட முன்னணி வீராங்கனைகள் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தனர்.
ஆடவர் இரட்டையர் பிரிவின் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் பயஸ், செக் குடியரசின் ஸ்டீபனக் ஜோடி, பிரேசிலின் மார்செலோ, குரோஷியாவின் இவான் ஜோடியை சந்தித்தது.
இதில் மார்செலோ- இவான் ஜோடி 6-3, 4-6, 10-5 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.








|