பாலின சர்ச்சையில் சிக்கியுள்ள இந்திய தடகள வீராங்கனை பிங்கி பிரமானிக்கின் மருத்துவ பரிசோதனை அறிக்கை இன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.மேற்குவங்கத்தை சேர்ந்தவர் பிங்கி பிரமானிக். ஆசிய விளையாட்டு உட்பட பல போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இவர் மீது பெண் ஒருவர் பாலியல் பலாத்கார புகார் கொடுத்தார்.
பிங்கி ஒரு ஆண் என்று புகாரில் கூறியிருந்தார். இதனடிப்படையில் கைது செய்யப்பட்ட பிங்கிக்கு, தனியார் மருத்துவமனையில் பாலின பரிசோதனை செய்யப்பட்டது.
இதில், ஆண் என்று தெரியவந்தது. தொடர்ந்து இவருக்கு “குரோமோசோம்” சோதனை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி ஹைதராபாத் மருத்துவமனைக்கு ரத்த மாதிரி அனுப்பப்பட்டு சோதனை நடந்தது.
இது குறித்து அரசு மருத்துவமனையின் பேராசிரியர் துகின் கன்டி கூறுகையில், பரிசோதனையின் அறிக்கை கிடைத்துள்ளது. பிரச்சினை நீதிமன்றத்தில் இருப்பதால், நாங்கள் பிரிக்க முடியாது.
அறிக்கை தற்போது மருத்துவக்குழுவின் தலைவர் ககாலியிடம் உள்ளது. இதை பாராசட் தலைமை நீதிபதிக்கு, இன்று அனுப்பவுள்ளோம் என்றார்.
தற்போது நீதிமன்ற காவலில் உள்ள பிங்கிக்கு ஆதரவாக மனித உரிமை அமைப்புகள் களமிறங்கியுள்ளன. இவரை பொலிசார் மிகவும் மோசமாக நடத்துவதாக குற்றம்சாட்டியுள்ளன. இவரை உடனடியாக விடுவிக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளன.
இந்நிலையில் இவரது குரோமோசோம் சோதனையின் முடிவு இவ்வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், பிங்கியை மருத்துவ சோதனையின் நிர்வாணப் படுத்தி கொடுமைப்படுத்திய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. |