இலங்கையில் நடைபெற்று வரும் டுவென்டி-20 உலக கிண்ண போட்டியின் நேற்றைய ஆட்டத்தில், இந்திய அணி ஆப்கானிஸ்தானை போராடி வென்றது.முதலில் விளையாடிய இந்திய அணியால் 5 விக்கெட் இழப்புக்கு 159 ஓட்டங்களே எடுக்க முடிந்தது. வீரட் கோஹ்லி 39 பந்தில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன் 50 ஓட்டங்களும், ரெய்னா 33 பந்தில் 38 ஓட்டங்களும் எடுத்தனர்.
பின்னர் விளையாடிய ஆப்கானிஸ்தான் 19.3 ஓவர்களில் 136 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததால், இந்தியா 23 ஓட்டங்களில் வெற்றி பெற்றது.
ஆப்கானிஸ்தான் அணியில் முகமது 17 பந்தில் 31 ஓட்டங்களும்(2 பவுண்டரி, 2 சிக்சர்), கரீம் சாதிக் 26 ஓட்டங்களும் எடுத்தனர். எல்.பாலாஜி, யுவராஜ்சிங் தலா 3 விக்கெட்டும், அஸ்வின் 2 விக்கெட்டும் கைப்பற்றினர். இந்திய அணியால் கடைசி ஓவரில்தான் வெற்றி பெற முடிந்தது என்பது பரிதாபமே.
கத்துக்குட்டி அணியான ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இந்திய வீரர்கள் பல சாதனைகள் படைத்து மிகப்பெரிய வெற்றியை பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்திய வீரர்கள் திணறியே ஆப்கானிஸ்தானை வெல்ல முடிந்தது.
ஷேவாக்(10), காம்பீர்(8) ஆகியோரது ஆட்டம் மிகவும் மோசமாக இருந்தது. இதேபோல அணியின் முதன்மை பந்து வீச்சாளரான ஜாகீர்கானும் ஏமாற்றம் அளித்தார். அவர் 3 ஓவர் வீசி 32 ஓட்டங்களை கொடுத்து விக்கெட் எதையும் கைப்பற்ற இயலவில்லை.
இந்திய வீரர்களின் ஆட்டம் குறித்து அணித்தலைவர் டோனி அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் இது சிறந்த வெற்றி இல்லை. வீரர்கள் திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அனைத்து நிலையிலும் முன்னேற்றம் தேவை.
20 ஓவர் போட்டியை பொறுத்தவரை எப்போதுமே இரு அணிகளுக்கும் வெற்றி வாய்ப்பு இருக்கும். எதிரணி துடுப்பாட்ட வீரருக்கோ அல்லது பந்துவீச்சாளருக்கோ அன்றைய தினம் சிறப்பாக அமைந்துவிட்டால் ஆட்டத்தின் முடிவில் மாற்றம் ஏற்படும். ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நாங்கள் சிறப்பாக ஆடவில்லை என்று தெரிவித்துள்ளார். |