ஒலிம்பிக் விளையாட்டுக்கள் (Olympic Games அல்லது Olympics) என்பது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கோடை காலத்திலும், குளிர் காலத்திலும் பல்வேறு விளையாட்டுக்களுக்காக நடத்தப்படும் அனைத்துலகப் போட்டி ஆகும்.
பண்டைய கிரீஸ் நாட்டில் இந்தப் போட்டிகளை நடத்தும் வழக்கம் இருந்து வந்தது.
பின்னர் Pierre de Coubertin|Pierre Frèdy, Baron de Coubertin என்ற பிரான்ஸ் நாட்டு பிரபுவால் (nobleman) 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்தப் போட்டிகளை நடத்தும் வழக்கம் மீண்டும் வந்தது.
உலகப் போர் நடைபெற்ற ஆண்டுகள் தவிர்த்து, 1896ஆம் ஆண்டு முதல் நான்கு ஆண்டுகளுக்குஒரு முறை கோடை ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடைபெற்று வருகின்றன.
ஆதி கால ஒலிம்பிக்ஸ் போட்டிகள் கி.மு.776ல் கிரேக்க நாட்டிலுள்ள ஒலிம்பியாவில் தொடங்கி கி.பி.393 வரை நடைபெற்றன.
கிரேக்க கவிஞர் பானாஜியோடிஸ் ஸௌட்ஸாஸ் கி.பி.1833ல் எழுதிய "இறந்தவர்களின் உரையாடல்" என்னும் கவிதை இப்போட்டிகளை மீண்டும் தொடங்கும் ஆர்வத்தை உருவாக்கியது.
பனிக்கால விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் பொருட்டு 1924ஆம் ஆண்டு முதல் குளிர் கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடத்தப்படுகின்றன.
ஒலிம்பிக்ஸ் 2012 – லண்டன்
லண்டன் நகரில் இதற்கு முன் இரண்டு முறை(1908லும், இரண்டாம் உலகப் போர் முடிந்தவுடன் 1948லும்) ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளது.
தற்போது மூன்றாவது முறையாக வருகிற 27ம் திகதி தொடங்கும் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் ஓகஸ்ட் மாதம் 12ம் திகதி வரை நடைபெற உள்ளது.
இதனைத் தொடர்ந்து பாராலிம்பிக்ஸ் போட்டிகள் ஓகஸ்ட் 29ம் திகதி முதல் செப்டம்பர் 9ம் திகதி வரை நடக்கும். இந்த போட்டிகளில் 204 நாடுகள் பங்கேற்க உள்ளன.
ஒலிம்பிக் தீபம்
மரியாதை, திறமை, நட்புணர்வு என்ற ஒலிம்பிக் கோட்பாட்டை குறிக்கும் வகையில் இந்த விளக்கு 3 பக்கங்கள் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
* தங்க நிறத்தில் ஜொலிக்கும் இந்த விளக்கின் உயரம் 800 மி.மீற்றர், எடை 800 கிராம்.
* ஒலிம்பிக் சுடர் ஓட்டத்தில் 8000 பேர் இந்த விளக்கை ஏந்திச் செல்ல உள்ளதால், இதில் 8000 துளைகள் இருக்கும் வகையில் வடிவமைத்துள்ளனர்.
* இதனால் விளக்கின் உட்புறத்தை தெளிவாகப் பார்க்க முடிவதுடன், சுடரின் வெப்பம் ஏந்திச் செல்பவரின் கைகளை பாதிக்காமல் குளிர்ச்சியாக வைத்திருக்கவும் உதவுகிறது.
* இங்கிலாந்தை சேர்ந்த பிரபல வடிவமைப்பாளர்கள் எட்வர்ட் பார்பர், ஜே. ஆஸ்ஜர்பி இணைந்து இதை உருவாக்கியுள்ளனர்.
* இங்கிலாந்து முழுவதும் 8,000 மைல் தூரத்துக்கு சுடர் ஓட்டம் நடைபெறுகிறது.
கிரெக்கத்தில் இருந்து மே 10ம் திகதி ஒலிம்பிக் ஜோதி பிரிட்டனுக்கு கொண்டு வரப்பட்டது. பிரிட்டனின் லேண்ட்ஸ் என்ட் பகுதியிலிருந்து மே மாதம் 19ம் திகதி ஒலிம்பிக் ஜோதி ஓட்டம் தொடங்கியது.
கடந்த 3 ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்ற பிரிட்டனைச் சேர்ந்த படகுப் போட்டி வீரர் பென் எய்ஸ்லி ஜோதி ஓட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்றனர். பிரிட்டன், அயர்லாந்தில் சுமார் 12 ஆயிரத்து 875 கி.மீ. தூரத்துக்கு ஒலிம்பிக் ஜோதி கொண்டு செல்லப்படுகிறது.
மொத்தம் 8 ஆயிரம் பேரது கைகளைக் ஒலிம்பிக் ஜோதி எட்ட இருக்கிறது.
ஒவ்வொரு நாளும் சராசரியாக 115 பேர் சுடரை ஏந்திச் சென்றனர். மொத்த பயண தூரம் 8000 கி.மீ. ஆகும். படகு, கேபிள் கார், பறக்கும் பலூன், சைக்கிள், மோட்டார் பைக், குதிரை என பல்வேறு வாகனங்களில் ஒலிம்பிக் சுடர் பயணித்தது.
இறுதியாக யூலை 27ம் திகதி லண்டனில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டி தொடக்க விழாவுக்கு ஜோதி சென்றடையும்.
ஒலிம்பிக்ஸ் தொடக்க நிகழ்வுகள்
தொடக்க விழா நிகழ்வுகள் போட்டியை நடத்தும் நாட்டின் பெருமையை பறைசாற்றும் விதமாக அமையும் என்பதால் இம்முறை பிரிட்டன் நகரம் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்துள்ளது.
இந்த தொடக்க விழா நிகழ்ச்சிகளுக்கு ஓஸ்கர் விருது படமான ஸ்லம்டாக் மில்லியனர் படத்தை இயக்கிய டேனியல் பாய்ல் தலைமை வகிக்கிறார்.
ஒலிம்பிக் தொடக்க விழா நிகழ்ச்சிகளுக்கு ‘Isles of Wonder’ என்று பெயர் சூட்டியுள்ளனர்.
மைதானத்தை இயற்கையாக வளர்ப்பு விலங்குகள் வாழும் பச்சை பசுமையான இடங்களை போல வடிவமைத்துள்ளனர். இந்நிகழ்ச்சிகள் அனைத்தும் உலகம் முழுவதும் பார்க்கும் படியாக ஒளிபரப்பப்படுகிறது.
இந்நிகழ்ச்சி ஆரம்பம் ஆவதை தெரிவிக்கும் விதமாக ஐரோப்பாவின் மிகப்பிரம்மாண்டமான மணி ஒலிக்கப்படும். வண்ண விளக்குகள், சிறந்த ஒலிகளுடன் போட்டிகள் தொடங்க உள்ளது.
தொடக்க விழாவின் போது போட்டியை நடத்தும் நாட்டின் தலைவரை, ஒலிம்பிக் போட்டியின் தலைவர் வரவேற்பார். இதன்படி பிரிட்டன் ராணி எலிசபெத்தை ஒலிம்பிக் தொலைவர் ஜாக்யூஸ் ரோக் வரவேற்பார்.
வீரர்களின் அணிவகுப்பு
இதனையடுத்து, அகரவரிசைப்படி ஒவ்வொரு நாட்டு வீரர்களும் ஒன்றன் பின் ஒன்றாக அணி வகுத்து மைதானத்துக்குள் செல்வர்.
ஆனால் முதலில் செல்வது பாரம்பரியம் மிக்க கிரீக் அணியும், அதன் பின் அகர வரிசைப்படி மற்ற நாடுகளின் அணிகளும், கடைசியாக போட்டியை நடத்தும் பிரிட்டன் அணியும் செல்லும்.
உரை
அனைத்து நாட்டு அணிகளும் மைதானத்துக்குள் நுழைந்த பின்னர் லண்டன் ஒலிம்பிக் போட்டியின் தலைவர் செப் கோவும், சர்வதேச ஒலிம்பிக் போட்டியின் தலைவர் ஜாக்யூஸ் ரோக்கும் உரையாற்றுவர். இதனையடுத்து ராணி எலிசபெத் போட்டிகளை தொடங்கி வைப்பார்.
ஒலிம்பிக் கீதம் மற்றும் கொடி
போட்டி அறிவிப்பு வெளியானதும் ஒலிம்பிக் கொடி ஏற்றி வைக்கப்பட்டு ஒலிம்பிக் கீதம் இசைக்கப்படும். இதனையடுத்து மற்ற நாட்டு கொடிகளும் மைதானத்தில் ஏற்றப்படும்.
உறுதிமொழி
இதனையடுத்து போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்கள், நடுவர்கள், பயிற்சியாளர்கள் அனைவரும் மேடையில் நின்று ஒலிம்பிக் கொடியினை இடது கையால் பிடித்துக்கொண்டு, வலது கையை உயர்த்தி போட்டி விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு நடப்பேன் என்று உறுதிமொழி எடுப்பர்.
ஒலிம்பிக் ஜோதி ஏற்றம்
தொடக்க விழா நிறைவாக மைதானத்துக்கு நடுவே அமைந்துள்ள மேடையில் கடைசியாக ஒலிம்பிக் ஜோதியுடன் வீரர் ஓருவர் மைதானத்துக்குள் நுழைந்து ஏற்றி வைப்பார். இந்த ஜோதி ஒலிம்பிக் போட்டி முழுமையாக நிறைவு பெறும் வரை தொடர்ந்து எரிந்து கொண்டேயிருக்கும்.
கலைஞர்கள் மற்றும் ரசிகர்கள்
தொடக்க விழா மற்றும் நிறைவு விழாவிலும் சுமார் 15,000 கலைஞர்கள் பங்கு பெறுவார்கள். இந்நிகழ்ச்சிகளை உலகம் முழுவதிலிருந்து 400 கோடி மக்கள் பார்ப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒலிம்பிக்ஸ் நிறைவு விழா
இந்த போட்டியின் நிறைவு விழாவில் இங்கிலாந்தின் பிரிட்டனின் பிரபலமான ”ஸ்பைஸ் கேர்ள்ஸ்” பொப் இசைக்குழு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
பொப் இசை உலகில் கொடிகட்டிப் பறந்த இந்த குழுவில் ஜெரி ஹாலிவெல், எம்மா பன்டன், மெலனி சிஷோம், மெலனி பிரவுன், விக்டோரியா பெக்காம் ஆகிய 5 பாடகிகள் இடம் பெற்றிருந்தனர்.
இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், கடந்த 2008ம் ஆண்டு பிரிந்தனர். அதன் பின்பு முதல் முறையாக இவர்கள் 5 பேரும் மீண்டும் ஒன்றாக இணைந்து இசை நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதால், ஒலிம்பிக் நிறைவு விழா மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த இசைக் குழுவின் பிரபல பாடலான வானபி உட்பட 2 பாடல்களுக்கான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
வித்தியாசமான போட்டியாளர்கள் கால்களை இழந்தவர்
இந்த லண்டன் ஒலிம்பிக் போட்டியின் ஆடவர் 400 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில் இரண்டு கால்களையும் இழந்த தென் ஆப்ரிக்க தடகள வீரர் ஆஸ்கார் பிஸ்டோரியஸ், மற்ற வீரர்களுக்கு சவாலாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரு கால்களையும் இழந்த வீரர் ஒலிம்பிக்கில் பங்கேற்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
கர்ப்பிணி பெண்
துப்பாக்கி சுடுதல் வீராங்கனையான நுர் சூர்யானி முகமது(வயது 29) மலேசியாவைச் சேர்ந்தவர் ஆவார். இவர் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் பங்கேற்கும் முதல் மலேசிய வீராங்கனை என்ற பெருமையை பெறுகிறார்.
மேலும், இவர் 8 மாத கர்ப்பிணி என்பது தான் ஆச்சர்யமான விடயமாகும்.
அரேபியப் பெண்கள்
ஒலிம்பிக் போட்டிகளில் இதுவரை பங்கேற்காமல் இருந்த சவுதி அரேபியா, கத்தார் மற்றும் புருனே நாட்டுப் பெண்கள் முதன் முறையாக பங்கேற்க உள்ளனர்.