2012ம் ஆண்டிற்கான ஐ.பி.எல் 5 தொடர் ஏப்ரல் 4ம் திகதி தொடங்கி மே 27ம் திகதி முடிந்தது. ஐ.பி.எல் தொடரின் லீக் போட்டிகள் தொடங்குவதற்கு முதல் நாளான 3ம் திகதி ஐ.பி.எல் தொடக்க விழா மிகவும் கோலகலமாக நடைபெற்றது.
பாலிவுட் நடிகர்களான அமிதாப் பச்சன், சல்மான் கான் ஆகியோரும், நடிகைகளான பிரியங்கா சோப்ரா, கரினா கபூர் ஆகியோரும் பங்கேற்று சிறப்பித்தனர். நடன இயக்குநரான பிரபுதேவாவின் சிறப்பு நடனமும் இடம்பெற்றது.
மேலும், அமெரிக்க பொப் பாடகி கேட்டி பெர்ரியும் கவர்ச்சி நடனமும் பலரையும் ரசிக்க வைத்தது. இப்போட்டியை 163 மில்லியன் மக்கள் கண்டுகளித்துள்ளனர்.
அணி விபரம்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கவுதம் கம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சிறந்த வீரர்கள் உள்ள போதும் ஆரம்ப லீக் ஆட்டங்களில் சில தோல்விகளை சந்தித்தது. பின்பு சுதாரித்த கொல்கத்தா அணி அதிரடியான ஆட்டங்களால் வெற்றிகளை குவித்து புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்தது. முதல் பிளே ஆப் சுற்றில் முதல் இடத்தில் இருந்த டெல்லி டேர்டெவில்ஸ் அணியை தோற்கடித்து நேரடியாக இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது. இறுதிச் சுற்றுப்போட்டியிலும் அதிரடியான ஆட்டத்தை தொடர்ந்த கொல்கத்தா அணி 191 ஓட்ட இலக்கை அடைந்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதன் முறையாக ஐ.பி.எல் 5 தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்றது.
சென்னை சூப்பர் கிங்ஸ் 2010 மற்றும் 2011 சீசனில் சாம்பியன் பட்டம் வென்ற அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இத்தொடரில் ஹாட்ரிக் வெல்லும் முனைப்புடன் களமிறங்கியது. எனினும் இத்தொடரில் பட்டத்தை வெல்லாத போதும் இறுதிச் சுற்று வரை முன்னேறியது. இந்திய அணித்தலைவர் மஹேந்திர சிங் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சற்றே அதிர்ஷ்டக்கார அணியே என்றே சொல்ல வேண்டும். லீக் சுற்று ஆட்டங்களிலும் வெற்றி தோல்வி என்று மாறி மாறி எடுத்தது. பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற 17 புள்ளிகளுடன் தவித்து கொண்டிருந்தது. கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராஜஸ்தான் றொயல்ஸ், பெங்களூர் றொயல் சேலஞ்சர்ஸ் அணி என்று அடுத்தடுத்து தோல்வியடைந்து சென்னை அணியை பிளே ஆப் சுற்றுக்குள் நுழைத்தது என்று தான் சொல்லலாம்.
அதிகம் எதிர்பார்க்கப்பட்டு ரூ. 10 கோடிக்கு விலைபோன ரவிந்திர ஜடேஜா இத்தொடரில் பிரகாசிக்க வில்லை. தொடக்க வீரரான முரளி விஜய் லீக் போட்டிகள் முழுவதும் பல விமர்சனத்துக்கு உள்ளாகி கடைசியாக லீக் இறுதிப் போட்டியிலும், பிளே ஆப் போட்டியிலும் அதிரடியாக விளையாடி சதம் கடந்தார். அணித்தலைவர் டோனி இத்தொடரில் பெரிய அளவில் ஜொலிக்க வில்லை. பிளேஆப் சுற்றின் தகுதிநீக்கச் சுற்றின் போது மட்டும் தனது அதிரடியான ஹெலிகாப்டர் ஷாட் மூலம் 112 மீட்டர் தூரத்திற்கு இத்தொடரின் பெரிய சிக்சர் அடித்தார்.
டெல்லி டேர்டெவில்ஸ் வீரேந்திர ஷேவாக் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணி இத்தொடரின் தொடக்கம் முதலே தனது அதிரடியான ஆட்டங்கள் மூலம் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. அணித்தலைவராக ஷேவாக் பல போட்டிகளில் சிறப்பாக விளையாடினார். சில போட்டிகளில் மட்டுமே விளையாடிய இங்கிலாந்து வீரர்களான கெவின் பீட்டர்சன், டேவிட் வார்னர் சதம் கடந்து வெற்றிக்கு வழி வகுத்தனர். கத்தரிப்பூ நிற தொப்பியை கைப்பற்றிய மோர்னே மார்கல் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் முன்னேற்றத்துக்கு உதவிகரமாக அமைந்தார். பிளே ஆப் சுற்றின் போதும் மார்கலை களமிறக்காததால் தான் டெல்லி அணி தோல்வியடைந்ததாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மும்பை இண்டியன்ஸ் சச்சின் டெண்டுல்கர் தலைமை வகித்து வந்த மும்பை இண்டியன்ஸ் அணியை இத்தொடரில் ஹர்பஜன் சிங் தலைமை வகித்தார். இத்தொடரின் முதல் போட்டியிலேயே சென்னை அணியை தோற்கடித்து நல்ல தொடக்கத்தை தந்தது. ஆனால் அதன் பின்னர் சில தடுமாற்றங்களை சந்தித்து பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது. இருப்பினும் சென்னை அணியிடம் தோல்வியடைந்ததால் தொடரிலிருந்து வெளியேறியது. மும்பை இண்டியன்ஸ் அணியில் ரிச்சர்ட் லெவி, அம்பாதி ராயுடு, கியார்ன் பொல்லார்டு ஆகிய வீரர்கள் சில போட்டிகளில் சிறப்பாக விளையாடினார். ரோகித் சர்மா ஒரு போட்டியில் அதிரடியாக விளையாடி சதம் கடந்தார். சச்சின் டெண்டுகர் எந்த போட்டியிலும் சொல்லும்படியாக விளையாடவில்லை.
பெங்களூர் றொயல் சேலஞ்சர்ஸ் டேனியல் வெட்டோரி வழி நடத்திய பெங்களூர் றொயல் சேலஞ்சர்ஸ் அணியை இம்முறை சில போட்டிகளில் வீராட் கோஹ்லி தலைமை தாங்கினார். சில தடுமாற்றங்கள் காணப்பட்டபோதும் பிளே ஆப் சுற்று போட்டியை நெருங்கியது. ஆனாலும் கடைசி போட்டியின் தோல்வியால் அந்த வாய்ப்பு பறிபோனது. பெங்களூர் அணிக்கு முக்கிய தூணாக அமைந்தது அதிரடி வீரர் கிறிஸ்கெயல் தான். அவர் இத்தொடரில் அதிக ஓட்டங்கள், அதிக சிக்சர் என்று பல சாதனையை செய்தார். மற்றொருவர் தென்ஆப்ரிக்கவின் டிவில்லியர்ஸ். இவரும் அதிரடியாக விளையாடி வெற்றிகளை தேடிக்குவித்தார். மற்றபடி எந்தவொரு வீரர்களும் சொல்லிக்கொள்ளும் படியான ஆட்டம் இல்லை.
ராஜஸ்தான் றொயல்ஸ் பெருஞ்சுவர் என்றழைக்கப்படும் ராகுல் டிராவிட்டின் தலைமையிலான ராஜஸ்தான் றொயல்ஸ் அணி இத்தொடரின் ஆரம்பப் போட்டிகளில் தொடர் வெற்றிகள் மூலம் முன்னணியில் இருந்தது. ஆனால் பின்னர் அடுத்தடுத்த தோல்விகளால் 7வது இடத்துக்கு தள்ளப்பட்டது. இத்தொடரில் அதிரடியாக சில வீரர்களில் ராஜஸ்தான் அணியின் அஜின்கியா ரஹானேயும் ஒருவர். இத்தொடரின் முதல் சதம் அடித்த வீரரும் இவர்தான். இது தவிர ஹாட்ரிக் பவுண்டரியும் அடித்தார். அணித்தலைவரான ராகுல் டிராவிட்டும் சிறப்பாக விளையாடினார். அதிக ஓட்டங்கள் குவித்த வீரர்கள் பட்டியலிலும் இவரும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் கில்கிறிஸ்ட் தலைமையிலான பஞ்சாப் அணி இம்முறை விளையாடிய 16 போட்டிகளில் தலா 8 போட்டிகளில் வெற்றியும், தோல்வியும் பெற்றது. பிரித்தி ஜிந்தாவின் கட்டிப்பிடி வைத்தியம் இல்லாததால் தானோ பஞ்சாப் அணி சுமாராகவே விளையாடியது. பஞ்சாப் அணியில் விளையாடிய மன்விந்தர் சிங் இம்முறை ரைசிங் ஸ்டார் விருதை வென்றார். பியூஸ் சாவ்லோ, பர்விந்தர் அவானோ ஆகியோர் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தினர்.
புனே வாரியர்ஸ் யுவராஜ்சிங் தலைமை தாங்கிய புனே வாரியர்ஸ் அணி இம்முறை கங்குலி தலைமையில் விளையாடியது. பெரிதும் எதிர்பார்க்கப்படாத புனே வாரியர்ஸ் அணி அடுத்தடுத்து சில போட்டிகளில் வெற்றி பெற்றது. அதன் பின்பு தொடர் தோல்விகளால் கடைசி இடத்தை பிடித்து தொடரிலிருந்து வெளியேறியது. இத்தொடரில் கங்குலி, அசோக் திண்டா, மர்லோன் சாமுவேல்ஸ் போன்ற சில வீரர்கள் சில போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டனர். மற்றபடி எந்த வீரர்களும் சிறப்பாக செயல் படவில்லை.
டெக்கான் சார்ஜர்ஸ் குமாரா சங்கக்காரா தலைமையிலான டெக்கான சார்ஜர்ஸ் அணி இம்முறை படுமோசமாக விளையாடியது என்றே குறிப்பிட வேண்டும். தொடர் தோல்விகளால் துவண்டது. 2009 ம் ஆண்டு ஐ.பி.எல் சாம்பியான டெக்கான் சார்ஜர்ஸ் அணி இம்முறை பெரதும் சிரமப்பட்டது. சில போட்டிகளில் பெரிய இலக்கை அடைந்தபோதும் தோல்வியை சந்தித்தது. மொத்த போட்டிகளில் 4 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றது. ஒரு போட்டியில் மழை பெய்ததால் ஒரு புள்ளி அதிகம் பெற்றும் 8வது அணியாக இருந்தது. டெக்கான் அணியில் ஷிகார் திவானும், சில போட்டிகளில் அணித்தலைவராக பணியாற்றிய காமிரான் ஒயிட்டும் சிறப்பாகவே விளையாடினர். தென் ஆப்ரிக்க வீரரான டேல் ஸ்டெயின் பந்து வீச்சில் சிறப்பாகவே செயல்பட்டார்.
அதிக ஓட்டங்கள் குவித்தவர்கள்
கிறிஸ் கெய்ல் மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்த கிறிஸ் கெய்ல், பெங்களூர் றொயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடினார். அவர் விளையாடிய 14 போட்டிகளில் 733 ஓட்டங்கள் குவித்து இந்த தொடரின் அதிக பட்ச ஓட்டங்கள் எடுத்த வீரர் என்ற பெருமையை பெற்றார். அதிகபட்சமாக ஆட்டமிழக்காமல் 128 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.இவர் இத்தொடரில் 1 சதம், 7 அரைசதம், 46 பவுண்டரி, மற்றும் இத்தொடரின் அதிகபட்ச சிக்சராக 59 சிக்சர்களையும் விளாசினார். மேலும், அவர் விளாசிய ஒரு சிக்சர் டியா என்ற சிறுமியின் மூக்கை உடைத்தது குறிப்பிடத்தக்கது.
கவுதம் கம்பீர் இந்திய வீரரான கம்பீர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் அணித்தலைவராக பொறுப்பேற்றதுடன் சாம்பியன் பட்டத்தை வெல்ல காரணமாக இருந்தார். 17 போட்டிகளில் விளையாடி 6 அரை சதமும், 64 பவுண்டரிகளும், 17 சிக்சர்களும் உட்பட 590 ஓட்டங்கள் குவித்தார்.
ஷிகர் திவான் இந்திய வீரரான ஷிகர் திவான் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடினார். 15 போட்டிகளில் விளையாடி 5 அரைசதமும், 64 பவுண்டரிகளுடன், 17 சிக்சருடன் 569 ஓட்டங்கள் எடுத்தார்.
அஜின்கியா ரஹானே இந்திய வீரரான ரஹானே, ராஜஸ்தான் றொயல்ஸ் அணிக்காக விளையாடினார். 16 போட்டிகளில் விளையாடிய ரஹானே இத்தொடரின் முதல் சதம் எடுத்தார். 3 அரைசதமும், அதிகபட்சமாக 73 பவுண்டரிகளும், 10 சிக்சருடன் 560 ஓட்டங்கள் எடுத்தார்.
அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள்
மோர்னே மார்கல் தென் ஆப்ரிக்க வீரரான மோர்னே மார்கல் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக 16 போட்டிகளில் விளையாடி அதிகபட்சமாக 25 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
சுனில் நரைன் மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்த சுனில் நரைன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வெற்றிக்கு உறுதுணையாக 15 போட்டிகளில் விளையாடி 24 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன் தொடர் நாயகன் விருதையும் வென்றார்.
லசித் மலிங்கா இலங்கை வீரரான மலிங்கா மும்பை இண்டியன்ஸ் அணிக்காக 14 போட்டிகளில் விளையாடி 22 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
விருதுகள்
ஆரஞ்ச் தொப்பி இந்த ஆரஞ்ச் தொப்பியானது அதிக ஓட்டங்கள் குவித்தவர்களுக்காக தரப்படும் விருது ஆகும். இந்த தொப்பியை தொடக்கத்தில் ராஜஸ்தான் றொயல்ஸ் அணிக்காக விளையாடிய அஜின்கியா ரஹானே நீண்ட நாள் வைத்திருந்தார். பின்பு வீரேந்திர ஷேவாக், கவுதம் காம்பீர், ஷிகார் திவான் என்று பலரின் கைகளுக்கு சென்று இறுதியாக அதிரடி வீரர் கிறிஸ் கையில் நிரந்தரமாக தங்கியது.
கத்தரிப்பூ(Purple) நிற தொப்பி இந்த கத்தரிப்பூ நிற தொப்பியானது அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களுக்காக தரப்படும் விருது ஆகும். இந்த தொப்பியை 25 விக்கெட்டுகள் வீழ்த்திய மோர்னே மார்கல் பெற்றார்.
ரைசிங் ஸ்டார் சிறந்த இளம் வீரருக்காக தரப்படும் இவ்விருதை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடிய மன்விந்தர் சிங் பெற்றார்.
பேர்பிளே விருது பேர்பிளே விருது மொத்த போட்டியிலும் பிரச்சினைகள் எதுவுமின்றி சிறப்பாக செயல்பட்டு அணிக்காக வழங்கப்படும் இவ்விருதை ராஜஸ்தான் றொயல்ஸ் அணி சார்பாக ராகுல் டிராவிட் பெற்றார்.
வோக்ஸ்வேகன் பவர் பெர்மான்ஸ் இவ்விருதை பெங்களூர் றொயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடிய தென் ஆப்ரிக்க வீரர் டிவில்லியர்ஸ் பெற்றார். வோக்ஸ்வேகன் வென்ட்ரோ கார் பரிசாக பெற்றார்.
சர்ச்சைகள்
இத்தொடரில் சுமார் 19 போட்டிகள் கடைசி ஓவரில் முடிந்துள்ளது. மேலும், இத்தொடரில் எந்த சீசனிலும் இல்லாத அளவிற்கு பிரச்சனைகளும் நடந்தது.
ஷாருக்கான் ஜெய்ப்பூர் மைதானத்தில் புகை பிடித்ததால் அவருக்கு சம்மன் வழங்கப்பட்டது.
மோனிஷ் மிஸ்ரா, ஸ்ரீவஸ்தா, சுதிந்தரா, அமித் யாதவ், அபிநவ் பாலி ஆகிய ஐந்து வீரர்களும் ஸ்பாட் பிக்ஸிங் என்னும் சூதாட்டத்தில் ஈடுபட்டதால் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டனர்.
ராகுல் சர்மா, வேய்ன் பர்னெல் இந்த இரு வீரர்களும் போதை விருந்தில் கலந்து கொண்டதாக கைது செய்யப்பட்டு பின்பு விடுதலை செய்யப்பட்டனர்.
பெங்களூர் அணியில் விளையாடிய லூக் போமர்ஸ்பெக் அமெரிக்க பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சி செய்ததால் கைது செய்யப்பட்டார். பின்பு இரு தரப்பினருக்கும் சமாதானம் ஏற்பட்டதால் வழக்கு திரும்பப்பெறப்பட்டது.
குடித்து விட்டு காவாலாளியுடன் தகராறு செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டதால் மும்பை வான்கடே மைதானத்தில் நுழைய 5 ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டு ஷாருக்கான் மீண்டும் சர்ச்சையில் சிக்கினார்.